காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடுக்குள்ள சட்டப்பூர்வ உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையில், கர்நாடகாவுக்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொல்வதைக் கேட்டுவிடுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இது, பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயலாகும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு, காவிரி நதிநீர் பங்கீட்டு விதிகள், ஒப்பந்தங்கள், சட்டப்பூர்வ தீர்ப்புகள் எதையும் மதித்ததில்லை என்றும், காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் எனச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கான தார்மீக உரிமையை மறுத்து வருவதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒருநாளும் ஏற்றதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முந்தைய காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது, அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து, தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும், அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து, அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு.
உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை என சீமான் சாடியுள்ளார். கபினி, ஏமாவதி, ஏரங்கி என விதிகளை மீறி அணைகளைக் கட்டிய கர்நாடகா, தற்போது மேகதாதுவிலும் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழர்களுக்கும், காவிரிக்குமுள்ள வரலாற்றுவழிப்பட்ட உயிர்த்தொடர்பு முற்றாக அறுந்துபோகும்; காவிரிப்படுகைப் பாலைவனமாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முதல்வர் விஜய் கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா? காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா? இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்? உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா என அவர் குறிப்பிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிட்டாததையும், எம்.ஜி.ஆர். பேச்சுவார்த்தை நடத்தியதையும் சுட்டிக்காட்டிய சீமான், விஜய்யின் அரசியல் பிம்பத்தை நிலைநாட்டுவதைத் தாண்டி இச்சந்திப்பில் வேறென்ன பயன் விளையப் போகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஆலோசனைகளைப் பெற முயற்சி எடுக்காத தவெக அரசு, முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் துடியாய் துடிக்கிறது? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசைக் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் வைத்துக் கொண்டு, அங்கு போய் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் ஊடகச்செய்தியைத் தாண்டி, உருப்படியாக எந்தப் பயனையும் இது தரப்போவதில்லை என சீமான் விமர்சித்துள்ளார்.
கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால், சூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி காவிரிப்படுகையில் மொத்தமாகப் பொய்த்துப் போனது. அடுத்தப் போகமான, சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதில் உறுதிப்பாடுமில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதை ஏற்க மறுத்து மேல்முறையீட்டுக்குச் செல்வதைச் சுட்டிக்காட்டிய சீமான், முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்கப் போகிறார்? என வினவியுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாது விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசு, இப்போது காவிரி நதிநீர் சிக்கலையும் மெத்தனப்போக்கோடும், அலட்சியத்தோடும் கையாள்வது ஏற்க இயலாத பெருங்கொடுமை என அவர் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் கோரி, புதிய சிக்கலை இழுத்துவிடத் துணிந்த முதல்வர் விஜய், தற்போது பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகா செல்வது வரலாற்றுப் பெருந்தவறாகும் என சீமான் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், சூழல் சரியில்லாததால் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என்கிறார். எப்போதும் கர்நாடகாவுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையே செய்ய வேண்டாமென்று நாங்கள் கூறுகிறோம். தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவைக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

