மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் நேற்று 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தற்போது தங்க மோதிரம் வழங்கும் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்ப் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 86-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநகராட்சியால் தூய தமிழ்ப் பெயர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து, தமிழில் பெயர் வைக்கப்படும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அன்றைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால், நாம் மேயராக இருந்தபோது இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதும், அரசு மருத்துவமனைப் பிரசவங்களை அதிகரிப்பதுமான நோக்கதோடு வெற்றிகரமாக சற்றொப்ப 17 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கி நடைமுறைப்படுத்தியது திராவிடமாடல் மாநகராட்சி நிர்வாகம் தான் என்பதை எண்ணி பெருமைகொள்வோம்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த பதிவு, முதலமைச்சர் விஜய் தற்போது தொடங்கியுள்ள தங்க மோதிர திட்டம் என்பது உண்மையில் 2009 ஆம் ஆண்டிலேயே திமுக ஆட்சியின் கீழ் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட திட்டம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், தமிழில் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம், தமிழ் பெயர்களை ஊக்குவிக்கவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்கவும் நோக்கமாகக் கொண்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக திராவிடமாடல் மாநகராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் தனது பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை தற்போது முதலமைச்சர் விஜய் தங்க மோதிரம் திட்டம் என தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
