கோவை அன்னூர் பகுதியில், வீட்டினுள் கொசு மருந்து தெளிக்கப்பட்டதில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள், டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கும் ஒரு முக்கிய துப்புரவுப் பணியாக தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பணி, கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நகர மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தும் கொசு மருந்து (Mosquito Fogging / Larvicide), பறக்கும் கொசுக்களையும், தேங்கிய நீரில் வளரும் அவற்றின் புழுக்களையும் அழிக்கும் திறன் கொண்ட வேதிப்பொருட்களின் கலவையாகும். பொதுவாக, 19 பங்கு டீசலுடன் 1 பங்கு மருந்து கலந்து, சிறப்பு வாகனங்கள் மூலம் புகை வடிவில் இது தெளிக்கப்படுகிறது. இந்த மருந்து தெளிக்கப்படும்போது, வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் ஆகியோர் இந்த புகையை நேரடியாக சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை அன்னூர் பகுதியில் ஒரு வீட்டில் கொசு மருந்து தெளிக்கப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மோகன் (65) மற்றும் ராணி (75) ஆவர். இவர்கள் இருவரும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயர சம்பவத்திற்கு, பயன்படுத்தப்பட்ட Pyrephrum என்ற பூச்சிக்கொல்லி மருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கொடிய சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம், கொசு மருந்து தெளிக்கும் பணியில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் மருந்துகளின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

