திமுக மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 'கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கும், திமுக குடும்பத்திற்கும் இடையே கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நல்லுறவு நீடிக்கிறது. திமுக தலைமை எடுக்கும் முடிவுகளைத்தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பிரதிபலிக்கிறார். இந்த உறவின் வெளிப்படைத்தன்மை இதன்மூலம் தெளிவாகிறது.
திமுக குடும்பம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் பல வழிகளில் விரும்பியுள்ளார். காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதை விட, டி.கே.சிவக்குமார் திமுக குடும்பத்தின் தலைவரான ஸ்டாலின் சொல்வதைத்தான் அதிகமாகக் கேட்கிறார். சிவக்குமார் என்ன நினைக்கிறாரோ, அதையே திமுகவும் பேசி வருகிறது.
காவிரி விவகாரத்தில் சுமுகமான தீர்வைக் காண முதல்வர் விஜய் முயற்சித்தார். அவருக்கு நற்பெயர் கிடைத்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக, திமுக அவருக்கு முட்டுக்கட்டையாகச் செயல்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, காவிரிப் பிரச்சனையில் திமுகவும், கருணாநிதியும் தான் அனைத்து வகையிலும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இப்போதும் அதே குழப்பமான நிலையைத்தான் அவர்கள் தொடர்கிறார்கள்.
தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, நாளை உச்ச நீதிமன்றத்தில் முதல்வரின் உத்தரவின் பேரில் வழக்குத் தொடுக்கப்படும். திமுக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டுள்ளது. சிவக்குமாருடன் இணைந்து, திமுக தமிழக அரசுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது' என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

