தமிழக அரசின் கலைவாணர் அரங்கத்தில், நடிகர் விஜய் கட்சிக்குச் சொந்தமான ஐடி விங் மற்றும் ஆன்லைன் பொறுப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) கட்டுப்பாட்டில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், தவெக (TVK) கட்சியின் ஐடி விங் மற்றும் ஆன்லைன் பொறுப்பாளர்கள் (TVK Virtual Warriors Team) பங்கேற்ற கூட்டம் வெளிப்படையாக நடைபெற்றிருக்கிறது. அரசு அரங்கங்களை ஒரு அரசியல் கட்சியின் ரசிகர் மன்றக் கூடாரமாக மாற்றுவதுதான் விஜய்யின் 'மாற்றத்திற்கான' திட்டமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த அதிகார துஷ்பிரயோகம் குறித்து செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்குத் தெரியுமா என்றும், தெரிந்தும் அவர் மௌனமாக இருக்கிறாரா அல்லது முதலமைச்சரைப் போலவே அவரும் ஒரு 'டம்மி'யாக செயல்படுகிறாரா என்றும் திமுக விமர்சித்துள்ளது. ஒரு அரசியல் கட்சி நிகழ்வுக்கு அரசு அரங்கத்தில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக, DIPR இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ் (IAS) இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், அல்லது செய்தித்துறையை ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு பதிலாக, அரசுப் பதவியில் அமரவைக்கப்பட்டுள்ள ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 'குரு' (@GuRuThalaiva) என்ற நபர் இயக்குகிறாரா என்றும் திமுக தனது பதிவில் கடுமையாகச் சாடியுள்ளது. அரசு சொத்துக்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், இது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும் திமுக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
