முதல்வர் பொறுப்பில் இருக்கும் விஜய், சட்டமன்றத்தில் தனது உடல் மொழி குறித்து அளித்த விளக்கத்திற்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பரந்தாமன் தனது பதிவில், 'சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை, உரையாற்றுவதுதான் உங்கள் வேலை மாண்புமிகு விஜய் அவர்களே!' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 'எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று ட்வீட் போடுவது, நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையே காட்டுகிறது. முதல்முறையாக நீங்கள் இப்படி செய்திருந்தால், உங்களின் இந்த விளக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்யாத ஒரு கீழ்த்தரமான செயலை, முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு இது இரண்டாவது முறையாக நீங்கள் செய்திருக்கிறீர்கள். எனவே, வேண்டும் என்றே திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள்' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 'உழைப்பைத் தந்து, தியாகத்தைச் செய்து, இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பிறகு வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள். ஊதாரித்தனமான வசனங்கள் பேசி, வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால், முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்' என்றும் பரந்தாமன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மானியத்தின் பதிலுரையில், பதிலில்லாத பதிலுரையை அளித்த வரலாற்றை உருவாக்கிய முதல்வர் தாங்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு, நீங்கள் பதில் அளிக்கத் தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள்' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல், மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள் என்றும் பரந்தாமன் தனது பதிவின் மூலம் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கள், முதல்வர் விஜய் மற்றும் திமுக தரப்புக்கு இடையே ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

