தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியான முதல் 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடலாம் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த 16-ந் தேதி திரைப்படத் துறையினர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து, நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி கோரினர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு அனுமதி பெறாமல் 5 காட்சிகள் திரையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'திரையுலகின் தற்போதைய சூழலைப் புரிந்துகொண்டு, திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடப்படும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய அன்புச் சகோதரர் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வருவாய் ஈட்டுதலில் இது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'அனைத்துத் துறைகளிலும் பொதுமக்களுக்கு நிவாரணமும், முற்போக்கான வளர்ச்சியும் அளிக்கும் வகையிலான மேலும் பல அரசாணைகள் பிறப்பிக்கப்படுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எங்கள் அனைவரின் சார்பாகவும் ஒரு மிகப்பெரிய 'விசில்' அவருக்கு உரித்தாகட்டும்!' என்றும் விஷால் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கை திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.