தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இந்த முக்கிய படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள முகவரியில் காலை 10 மணி முதல் அடுத்த மாதம் ஜூன் 17-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
எனவே, கால்நடை மருத்துவத் துறையில் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூன் 17 வரை மட்டுமே உள்ளது.