வெனிசுலாவில் இரத்தம் போல் சிவந்த வானம்: மக்கள் பீதி!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸில், வானம் திடீரென அடர் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறமாக மாறியதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரப்பரப்பும் நிலவியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக மிகத் தாழ்வான நிலையில் தென்பட்ட மேகக் கூட்டங்கள், இந்த ஒட்டுமொத்த காட்சியையும் மிகவும் விசித்திரமாகவும், மர்மம் நிறைந்ததாகவும் மாற்றின.

கராகஸ் நகர வானில் தோன்றிய இந்த அமானுஷ்யக் காட்சியைக் கண்ட உள்ளூர் மக்கள், அதனைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, உலகளாவிய நெட்டிசன்கள் மத்தியில் இதுகுறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

சமீபத்தில், கடந்த ஜூன் 24 அன்று வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாகச் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த நிலநடுக்கப் பேரழிவின் சோக வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், வானம் இவ்வாறு இரத்தச் நிறமாக மாறியுள்ளது தங்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மூடநம்பிக்கை கொண்ட சிலர், இது மேலும் வரவிருக்கும் ஏதோவொரு பெரிய இயற்கை பேரழிவுக்கான ‘கெட்ட சகுனம்’ எனப் பீதியடைந்துள்ளனர்.

இருப்பினும், வானிலை ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். சூரிய ஒளி வளிமண்டலத்தின் அடர்த்தியான மேக அடுக்குகளின் வழியே ஊடுருவிச் சிதறும்போது ஏற்படும் ஒரு சாதாரண இயற்கை நிகழ்வுதான் இது என்றும், நிலநடுக்க பாதிப்பால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசி மற்றும் துகள்களின் அடர்த்தி காரணமாக இந்த நிறமாற்றம் இன்னும் தீவிரமாகத் தென்படுவதாகவும் அறிவியல் பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விசித்திர வானம் கராகஸ் நகர மக்களிடையே தற்காலிகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version