வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றும் அதிபர் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய திட்டத்தை அந்நாட்டு இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரானது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க படைகள் வெனிசுலாவிற்குள் நுழைந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் மதுரோ அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, வெனிசுலாவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா அமெரிக்காவின் மறைமுக கட்டுப்பாட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், மதுரோவால் முடக்கப்பட்டிருந்த அமெரிக்க எண்ணெய் கொள்முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவின் கட்டளைகளுக்கு இணங்கவில்லை என்றால் மதுரோவின் கதிதான் டெல்சிக்கும் நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றும் டிரம்ப்பின் முன்மொழிவு வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 50 மாகாணங்கள் உள்ளன. முன்னதாக, கனடாவை 51வது மாகாணமாக மாற்ற வேண்டும் என டிரம்ப் முயன்றதாகவும், ஆனால் அந்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், 'அமெரிக்காவின் 51வது மாகாணமாக வெனிசுலாவை மாற்றும் சாத்தியக்கூறு ஒருபோதும் பரிசீலிக்கப்படவில்லை. இது எங்களது சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டிற்கு எதிரானது. நாங்கள் எங்கள் சுதந்திரத்தை நேசிக்கிறோம்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர டிரம்ப் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.