வெள்ளியங்கிரி மலை: அடுத்த ஆண்டு முதல் மருத்துவ சான்றுடன் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்!

கோவை அருகே அமைந்துள்ள புனித வெள்ளியங்கிரி மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பு நலன் கருதி, வனத்துறையினர் அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். பக்தர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில், இணையவழி முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையில், பூண்டிக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலை, ஏழு சிகரங்களைக் கடந்து சுயம்புலிங்க வடிவில் அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை இந்த மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த ஆன்மீகப் பயணத்தில் சில பக்தர்கள் உயிரிழக்கும் துயர சம்பவங்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த அசம்பாவிதங்களைத் தவிர்க்க, வனத்துறையினர் மலையேற்றத்திற்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வெள்ளியங்கிரி மலை ஏற்றம் மிகவும் கடினமானதும், செங்குத்தானதும் ஆகும். இதற்கு நல்ல உடல் வலிமையும், மன வலிமையும் அவசியம். உடல்நிலை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மலையேறுவது ஆபத்தானது. எனவே, அடுத்த ஆண்டு முதல், ஆதார் அட்டை மற்றும் மருத்துவச் சான்றுடன் பக்தர்கள் முற்றிலும் இலவசமாக இணையத்தில் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்படும்' என்று தெரிவித்தனர்.

குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், அதற்கான உரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தரைமட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் ஏற நினைக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, மருத்துவச் சான்றுகள் கட்டாயம் கேட்கப்படும் என்றும் அதிகாரிகள் விளக்கினர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version