திராவிட இயக்கத்தின் அறிவுக் கொடையை தொகுத்து வெளியிடும் 'திராவிடக் களஞ்சியம்' திட்டம் தொடர்வதை உறுதிசெய்யுமாறு தமிழக முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய்க்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இந்த முக்கியத் திட்டமானது, திராவிட இயக்க சிந்தனையாளர்களின் ஆக்கங்களைத் தொகுத்து நூல்களாக வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டது. தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022 மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து இந்தத் தொகுப்பு நூல்களை வெளியிடும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, தலா 500 பக்கங்கள் கொண்ட 14 தொகுதிகளை வெளியிடத் திட்டமிடப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது.
நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகள், திராவிட இயக்கத்தால் விளைந்த சமூக, பண்பாட்டு, பொருளாதார மாற்றங்கள், திராவிட இயக்கப் பெண் சிந்தனையாளர்களின் சிந்தனைகள், திராவிட இயக்கச் சிறுகதைகள், கவிதைகள் என ஏழு பெருந்தொகுப்புகள் கடந்த 18.02.2026 அன்று, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டன. இந்த முதல் ஏழு தொகுதிகளுக்கு முறையே திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, எழுத்தாளர் புனித பாண்டியன், ஆய்வாளர் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் எஸ்.ஆனந்தி, பேராசிரியர் ந.இளங்கோ, பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி ஆகியோர் பதிப்பாசிரியர்களாகப் பணியாற்றினர். தமிழ்நாடு பாடநூல் கழக ஆலோசகர் தோழர் மூ.அப்பணசாமி பொதுப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.
முதல் ஏழு தொகுதிகள் நூலாக வெளிவந்ததைப் போலவே, அடுத்த தொகுதிகளும் வெளியிடப்பட வேண்டியுள்ளது. மூன்று ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்ட இத்திட்டத்திற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தேர்தல் காரணமாக ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, மேலும் சில நூல்கள் அச்சுக்குத் தயாராகவும், சில நூல்கள் தொகுப்புப் பணி நிறைவடையும் நிலையிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தமிழ்நாட்டின் வரலாற்றுக் கருவூலமாகும்.
ஆட்சி மாறினாலும் இத்திட்டம் தடைப்படாமல் தொடர்ந்து நிறைவு செய்யப்பட வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் போன்றோரை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு செயல்படும் அரசு என அறிவித்துக் கொண்டுள்ளதால், இத்திட்டம் தொடர்வதில் கொள்கை ரீதியான மாறுபாடு இருக்காது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுப் பதிவுகளில், நிகழ்கால அரசியல் மாறுபாடுகளால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும், இத்திட்டத்திற்கு கூடுதல் நிதியும் தேவையில்லை, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியே போதுமானது என்றும், தேவை கூடுதல் கால அவகாசம் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். உரியோர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட குழு அதன் பணியைத் தொடரும் வகையில் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் தந்தை பெரியாரை 'கொள்கைத் தலைவராக' ஏற்றுள்ள நிலையில், இது ஒரு முக்கிய கொள்கை வரலாற்று அறிவாயுதம் என்பதால், அரசியல் கண்ணோட்டமின்றி, கொள்கைப் பார்வையோடு இதனைத் தொடர அரசு அனுமதி அளிப்பது மிக முக்கியம் என்று கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசு இதனைச் செய்யும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

