மதிமுக எம்.எல்.ஏக்கள் பரபரப்பு பேட்டி: வைகோ நிர்பந்தம் – திமுக எம்.எல்.ஏக்களாக தொடர்கிறோம்

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இராசேந்திரன் மற்றும் செந்தில்செல்வன்

பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தொடர்வதாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இராசேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் ஆகியோர் அறிவித்துள்ளனர். திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற இவர்கள், இது தொடர்பாக கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக வேட்பாளர்களாக தலைவர் வைகோ அவர்களால் நிறுத்தப்பட்டோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வைத்த கடையநல்லூர் மற்றும் சீர்காழி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் எங்களது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் பரப்புரையின் போது, எங்கள் இருவரையும் வெற்றி பெற வைத்தால் ஐந்தாண்டு காலத்திற்கு சிறப்பான சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்று தலைவர் வைகோ உறுதியளித்தார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மே 23, 2026 அன்று கடையநல்லூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்திலும் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மே 4 முதல் ஜூன் 15 வரை சட்டமன்றத்தில் திமுக கொறடாவின் உத்தரவுப்படி நடந்து கொள்ளுமாறு ஊடகங்களில் பொதுச்செயலாளர் வைகோ கூறிய நிலைப்பாடு, ஜூன் 16 அன்று தமிழ்நாடு அமைச்சர் ஒருவரை சந்தித்த பிறகு மாறத் தொடங்கியது. அதன் பிறகு, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தங்களை ராஜினாமா செய்யுமாறு பொதுச்செயலாளர் வைகோ நிர்பந்தித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், தொகுதி மக்களும், பொதுநல அமைப்பினரும், 'நீங்கள் ராஜினாமா செய்யக் கூடாது, சட்டமன்ற உறுப்பினராகவே தொடர வேண்டும்' என்று தங்களுக்கு அறிவுறுத்தியதாகவும், 'வாக்களித்த எங்களுக்கு மரியாதை தரும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்களை பொதுச்செயலாளர் வைகோவிடம் நேரில் தெரிவித்தபோதும், அவர் அதனை ஏற்கவில்லை என்றும், இருப்பினும் ஆறு மாத காலத்திற்கு அமைதியாக இருக்க முடிவு செய்து, அமைதியாகவே இருந்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், 'அவர்கள் இருவரும் ஒரு மாதத்துக்கு முன்பே விலை போய்விட்டார்கள்' என்று பேட்டி அளித்தது, தொண்டர்கள் மத்தியில் தங்கள் மீது அவதூறு பரப்பியது வேதனை அளித்ததாக இராசேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் தெரிவித்துள்ளனர். சுமார் நாற்பது ஆண்டுகளாக வைகோ பின்னால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பயணித்த தங்களுக்கு, இறுதியாக கிடைத்த இழிவான பழிச்சொல் தாங்கிக் கொள்ள முடியாததாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆளும் கட்சி கூட்டணியில் சேர்ந்து, மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்று, அமைச்சராகக் கூட ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சிறு வயது முதலே நேசித்த திராவிட இயக்கத்தின் கம்பீரமான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்றிட உறுதியேற்று, இந்திய நாடு வியந்து பார்த்த திராவிட மாடல் ஆட்சியைக் கொடுத்த போற்றுதலுக்குரிய முன்னாள் முதலமைச்சர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஆகஸ்ட் 8, 2026 அன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களை அன்புடன் அழைத்து அரவணைத்து வாழ்த்திய கழகத் தலைவர் அவர்களுக்கும், அரசியல் வானில் நம்பிக்கைக்குரிய எதிர்காலமாக விளங்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இயக்கத்தின் அனைத்து முன்னணியினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கவும், திராவிடக் கொள்கைகள் வலிமை பெறவும் சிப்பாய்களாக களத்தில் நின்று கடமை ஆற்றுவோம் என்றும், வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மனநிறைவுடன் தங்கள் பணியைத் தொடர்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பொதுவாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திய தலைவர் வைகோ அவர்களுக்கும், கண்ணியமும் அன்பும் நிறைந்த உண்மையான மதிமுக நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version