மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது 83வது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். 'வைகோ 83' என்ற பெயரில் எந்த பிறந்தநாள் விழாவையும் கொண்டாட வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது உண்மையான பிறந்தநாள் செப்டம்பர் 22 ஆகும் என்றும், ஆனால் பள்ளி ஆவணங்களில் வயது குறைவாகப் பதிவு செய்யப்பட்டதால் மே 22 என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பள்ளிச் சான்றிதழில் மே 22 எனப் பிறந்தநாள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது தனது உண்மையான பிறந்தநாள் அல்ல என்றும், இது குறித்து பலமுறை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு மே 22 அன்று அப்போதைய இந்திய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியபோது, அது தனது பிறந்தநாள் அல்ல என்றும், பள்ளிப் பதிவிற்காக முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட நாள் என்றும் கூறியதாக வைகோ நினைவு கூர்ந்துள்ளார். அதற்கு வாஜ்பாய், 'ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன, அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தான் இருக்கும், என் வாழ்த்துக்கள் அந்த நாளுக்குச் சேரட்டும்' என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல திராவிட இயக்கத் தலைவர்கள் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாடத் தொடங்கிய நிலையில், தான் ஏன் மறுக்க வேண்டும் என்று சிலர் கேட்டதாகவும், பின்னர் தனது உண்மையான பிறந்தநாள் செப்டம்பர் 22 என அறிந்ததும், தனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் கொண்டாடியதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, துணைப் பொதுச்செயலாளர் ஜீவன் என்பவர் தனக்குத் தெரியாமல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் 22ஐ மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட கழக முன்னணியினர் முடிவு செய்து, தன்னை நிர்பந்தித்ததாகவும், அரை மனதுடன் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றம் பதிவு செய்யப்பட்டு முன்பணம் செலுத்தப்பட்டிருந்தாலும், இந்த ஏற்பாடு தனது மனதில் உறுத்தலாக இருந்ததாக வைகோ கூறியுள்ளார். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை தனது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக நடத்தி வருவதாகவும், அண்ணாவின் 100வது பிறந்தநாள் விழாவை தி.மு.க. கொண்டாடாத நிலையில், மதுரை மாநகரில் எழுச்சி மாநாடாக நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.கழகம் அண்ணா பிறந்தநாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய பிரதமரையோ அழைக்கவில்லை என்றும், மாறாக அந்த ஆண்டில் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 அன்று காஞ்சிபுரத்தில் நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று, அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மெரினா கடற்கரையில், அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை பங்கேற்கச் செய்து விடியற்காலை வரை நடத்தியதை வைகோ நினைவு கூர்ந்துள்ளார்.
இயக்கத்தில் உள்ள தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, தனக்குத் தெரியாமல் பொருள் செலவு செய்து தனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 'வைகோ 83' என்ற இலச்சினை தயாரித்துள்ள நிலையில், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவதுதான் கழகத்தின் கடமை என்றும், தனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை முற்றிலும் விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மட்டுமல்ல, தான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார். அன்றைய தினம் யாரும் தன்னைச் சந்திக்க முற்பட வேண்டாம் என்றும், தான் எங்காவது பிறர் அறியாமல் அமைதியாகக் கழிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது புகைப்படம் போட்ட சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவற்றை ஒட்டி மனதைப் புண்படுத்த வேண்டாம் என்றும், 'வைகோ 83' என்ற தலைப்பில் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட யாரும் முற்பட வேண்டாம் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்பட்டால், தனது மன அமைதிக்காக, தனது எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்வதாகவும் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
