வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி விதித்த கட்டுப்பாடு: இந்திய வீரர்கள் அறைக்குள் நுழைய தடை

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகவுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமை முழுமையாகப் பயன்படுத்த ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, 16 வயதுக்குட்பட்ட வீரர்கள் மூத்த வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. இதன் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒவ்வொரு மைதானத்திலும் தனி மாற்று அறை வழங்கப்படும்.

போட்டிகள் நடைபெறும் நேரத்திலும், அணி ஆலோசனைக் கூட்டங்களின் போதும் மட்டுமே அவர் இந்திய டிரஸ்ஸிங் ரூமிற்குள் அனுமதிக்கப்படுவார். போட்டிக்கு முன்னும் பின்னும் உடை மாற்றும் நேரங்களில் அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இங்கிலாந்து விளையாட்டுப் போட்டிகளில் இது வழக்கமான நடைமுறை என்றாலும், இந்தியாவில் இது போன்ற விதிகள் இல்லாததால் வைபவ்வுக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வைபவ் தயாராகி வருகிறார். சச்சின் 1989 இல் தனது 16 வயது 205 நாட்களில் அறிமுகமானார். வரும் வெள்ளிக்கிழமை இந்தியா – அயர்லாந்து டி20 போட்டியில் களம் இறங்கினால், வெறும் 15 வயது 91 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த மிக மிக இளம் வயதுடைய இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை வைபவ் படைப்பார். புதிய சூழலுக்கு எளிதில் பழக ஏதுவாக அவர் தனது பெற்றோருடன் இங்கிலாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் பெல்ஃபாஸ்டில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்திற்குப் பயணம் செய்ய உள்ளது. பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து ஒவ்வொரு மைதானத்திலும் வைபவ்வுக்குத் தேவையான தனி அறை மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version