நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீதான ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இது செங்காருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு உன்னாவ் எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் தன்னை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுமி புகார் அளித்தார். ஆரம்பத்தில் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அப்போதைய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றதுடன், பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை விசாரணை காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது வழக்கறிஞரும் சென்ற கார் மீது லாரி மோதியதில், சிறுமியின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர சம்பவங்களைத் தொடர்ந்து, வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும், சிறுமியின் தந்தை காவல் மரணம் தொடர்பான வழக்கிலும் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செங்கார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த டிசம்பர் 23 அன்று, செங்கார் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, அவரது மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை இரண்டு மாதங்களுக்குள் டெல்லி உயர் நீதிமன்றம் மீண்டும் புதிதாக விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.