ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 4 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 14 பிராந்தியங்களில் உக்ரைன் இன்று அதிகாலை டிரோன்கள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரே வொரோபியோவ் தனது வலைதளத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம், உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 24 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரைத்திருந்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, அதிகாலை 3 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சுமார் 556 ஆளில்லா விமானங்கள் ரஷ்ய படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில டிரோன்கள் இலக்குகளை தாக்கியுள்ளன.

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த டிரோன் தாக்குதல்கள் போரின் அடுத்த கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version