வீட்டிற்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மட்டும் அரசு கஜானாவில் பணம் இருக்கிறதா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் பதவி ஏற்கும்போது கஜானா காலியாக இருப்பதாகக் கூறியது நினைவூட்டினார். ஆனால் தற்போது 1,200 கோடி ரூபாயில் புதிய சட்டமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை யார் கேட்டார்கள் என்றும், இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் அவர் வினவினார்.
மக்கள் தங்கள் தவறை உணர்ந்துவிட்டதாகவும், தி.மு.க.வை இழந்துவிட்டோம் என்ற வருத்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தற்போதைய தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பு, பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் அளவுக்குக் குறைந்துவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், இளைஞர் அணியினர் ஆகியோர் மக்களிடம் சென்று, கடந்த முறை நாம் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, இந்த அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களில் செய்த தவறுகளை எடுத்துரைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர், விஜய் சினிமாவில் நடித்ததை விட சட்டசபையில் நன்றாக நடிக்கிறார் என்றும், பஞ்ச் டயலாக்குகளுக்குப் பதிலாக உண்மையான விஷயங்களைப் பேச வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சரின் முகத்தைப் பார்க்க தொலைக்காட்சித் திரை வேண்டும் எனக் கேட்பது சட்டமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசுவதைப் பார்க்க மக்கள் ஆர்வமாக இருப்பதாகக் கூறிய அவர், எழுந்து பதில் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தால், அவர் திடீரென மறைந்துவிடுவதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். திரைப்படங்களை விட தற்போது சட்டசபையில் அவர் சிறப்பாக நடித்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
