தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணுவின் உருவச்சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், அவர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், 'பெரியாரை சந்திக்காவிட்டால் கலைஞர் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பார்' என்றும், 'தற்போது களப் போராளிகளை விட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்கும் நபர்களையே சமூகம் அதிகம் கொண்டாடுகிறது' என்றும் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு தமிழகத்திற்குப் புதிதல்ல என்றும், அது வந்த நாள் முதலே திமுக அதை எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை திமுக நடத்தியுள்ளது என்றும், போராடினால் எதையும் பெற முடியும் என ஐயா நல்லக்கண்ணு உறுதியாக நம்பினார் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதற்குச் சிறந்த உதாரணமாக, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு போராட்டத்தைக் குறிப்பிட்டார். அந்தப் போராட்டம் ஒரு தொடக்கமே என்றும், நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராடி வருவதாகவும், நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் வரை சென்று போராடியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
2016-ஆம் ஆண்டு திமுக தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 'திமுக ஆட்சியை இழந்ததை விட, தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டப்பேரவை அமைந்திருக்கிறது. அதுதான் எனக்கு வருத்தம்' என்று தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது கலைஞர் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட பாசத்தை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.
ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டின் உயரிய விருதான ‘தகைசால் தமிழர்’ விருதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளார் என்றும், தான் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது, தோழர் நல்லக்கண்ணுவிடம் தான் முதல் நபராக வாழ்த்துப் பெற்றதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவரிடம் அரசியல் ரீதியாகவும், பல அறிவுரைகளையும் பெற்றதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
