தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 10 சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். முன்பு 'ஆணவப் படுகொலை' என்று அழைக்கப்பட்ட சம்பவங்கள், தவெக ஆட்சியின் கீழ் 'கௌரவக் கொலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சில பத்திரிகைகள் இதை 'காதல் மரணம்' என்றும் குறிப்பிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள், தற்போது தனிமனித ஒழுக்கம் குறித்து பாடம் நடத்துவதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சியின் 106 நாட்களில் மட்டும் 8 காவல் மற்றும் சிறை மரணங்கள் நடந்துள்ளன என்றும், இதுகுறித்து முதலமைச்சர் ஒரு 'மன்னிக்கவும்' (Sorry) கூட சொல்லவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
முன்னதாக, திமுக ஆட்சியின்போது காவல்நிலைய மரணம் நிகழ்ந்தபோது, 'மன்னிக்கவும்' தேவையில்லை, நீதி வேண்டும் என்று கூறியவர்கள், தற்போது ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறினார்.
தற்போதைய அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், திராவிட மாடல் ஆட்சியின் கீழ் குற்றங்கள் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு 'டாப் கியரில்' சென்றதாகவும், ஆனால் தவெக ஆட்சியின் கீழ் அது 'ரிவர்ஸ் கியரில்' செல்வதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், 116 நாள் ஆட்சியில் பெண்களுக்குப் பெரும் தொல்லைகள் ஏற்பட்டுள்ளதாகவும், கறிக்கடைகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தினமும் வெட்டுக்குத்து சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களால் கேள்வி கேட்டு சரியான பதிலைப் பெறும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 'ரீல்ஸ் கன்டென்ட், ரோல் கேமரா, ஆக்ஷன்' போன்ற நாடகத்தனமான பேச்சுகளையும், குட்டிக் கதைகளையும் தவிர்த்து, நேரடியாகக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார். திமுக இன்னமும் ஆட்சியில் இருக்கிறது என்ற எண்ணத்தை முதலமைச்சர் கைவிட்டு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருந்தால், அதைச் செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் சவால் விடுத்தார்.

