தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை கேலிக்குள்ளாக்கும் செயல் என பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொகிதீன், விசிக கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் எம்பி, வன்னியரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நட்சத்திர பேச்சாளர்களைப் பொறுத்தவரை, அந்தந்த கட்சியைச் சார்ந்த தலைவர்களை மட்டுமே அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 77-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவை மீறி, பிற கட்சித் தலைவர்களின் பெயர்களை தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சேர்த்துள்ளதை தமிழக தேர்தல் ஆணையம் (CEO TN) அங்கீகரித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். ஆளும் கட்சியான தவெக-விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாதவரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்தபோது எழுந்த சர்ச்சைக்குப் பிறகு, கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது. எனவே, உடனடியாக தமிழக தேர்தல் ஆணையம் (CEO TN) தவெக-விற்கு அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் சர்ச்சை: பாஜக கண்டனம்

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை