சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களைக் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்களுக்கு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு 'நல்ல சாவு வராது' என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது, அவர்களின் அதிகார ஆணவத்தையும், வெறிபிடித்த அதிகாரப் பசியையும் வெளிப்படுத்துவதாக தவெக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஜனநாயகத்தின் எஜமானர்களான பொதுமக்களை நோக்கி இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது, திமுகவின் ஜனநாயக விரோத மனப்பான்மைக்கு மேலும் ஒரு சான்றாகும்.
தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்காத மக்கள் மீது திமுகவினர் காட்டும் வஞ்சமும், வன்மமும் கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், மக்களையே இழிவுபடுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தவெக குறிப்பிட்டுள்ளது.
தோல்வி தந்த விரக்தியில், மக்கள் ஆதரவை ஏன் இழந்தோம் என்று சுயபரிசோதனை செய்யாமல், 'எப்படி எங்களைத் தோற்கடிக்கலாம்?' என்ற ஆத்திரத்தில் இருந்துதான் இதுபோன்ற சாபங்கள் வெடித்துச் சிதறுகின்றன. மக்களைச் சபிக்கும் இந்த அரசியலை மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
ஜனநாயகத்தில் மக்களே மன்னர்கள். அவர்களை இழிவுபடுத்திப் பேசுவதும், சபிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தவெக தனது கண்டனப் பதிவில் வலியுறுத்தியுள்ளது.

