ட்ரம்ப் அதிரடி: 3,700 பங்கு வர்த்தகம், வல்லுநர்கள் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். பல மில்லியன் டாலர்கள் இதில் கைமாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்க பங்குச் சந்தை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முதலீடுகள் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ளன. அதிபர் ட்ரம்ப்பின் நிதி முதலீடுகள் குறித்த இந்த விவரங்கள், ஒரு முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்ட நூறு பக்கங்களுக்கும் அதிகமான ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆவணத்தில், வாங்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட பங்குகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 40-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நடந்துள்ளன.

"இது நம்ப முடியாத அளவிலான வர்த்தகப் பரிமாற்றம். இந்த முதலீடுகள் ஹெட்ஜ் ஃபண்ட் பாணியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதுகிறேன்," என டட்டில் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேத்யூ டட்டில் தெரிவித்துள்ளார். இது பங்குச் சந்தை வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, என்விடியா, ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட், போயிங், காஸ்ட்கோ போன்ற நிறுவனங்களில் சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை ட்ரம்ப் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ கடமைகளை வணிக நலன்களுடன் கலப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், மூன்று மாதங்களில் 3,700 பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைகள் என்பது அந்த விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தனது முதலீடுகளை நிர்வகிக்கும் பொறுப்பை ட்ரம்ப் தனது இரண்டு மகன்களிடம் ஒப்படைத்துள்ளார். 2025 ஜனவரியில் மீண்டும் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து ஆகஸ்ட் வரை அவரது பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 690 ஆகவும், முதலீடு 103.7 மில்லியன் டாலராகவும் இருந்தது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் 380 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "அதிபர் ட்ரம்ப் அமெரிக்க மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார். இதில் எந்த முரண்பாடும் இல்லை," என்று கூறியுள்ளார். ட்ரம்ப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், "ட்ரம்ப்பின் முதலீடுகள் அனைத்தும் நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ட்ரம்ப் அல்லது அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் வர்த்தக நிர்வாகத்தில் ஈடுபடுவதில்லை," எனத் தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version