ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு அமெரிக்க லாபி உதவி – பரபரப்பு ஆவணங்கள் வெளியீடு

கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், மே 9 அன்று ஏற்பட்ட அமைதி உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.

இந்தச் சூழலில், வெளிநாட்டு ஏஜெண்டுகள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் அமெரிக்கா சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணங்களில், 'ஆபரேஷன் சிந்தூர்' காலகட்டத்தில், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மோதலை நிறுத்தவும் அமெரிக்காவின் தலையீட்டைக் கோரி, பாகிஸ்தான் வாஷிங்டனில் மிகப்பரந்த அளவில் 'லாபி' செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்திற்காக வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பணம் பெற்றுக்கொண்டு மேற்கொண்ட இந்த 'லாபி' பணிகள் அந்த ஆவணங்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் தரப்பு விரிவாக விவாதித்துள்ளது.

பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் நிதி கொள்கைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதைக் கண்காணிக்கும் FATF அமைப்பு மற்றும் அமெரிக்கக் கருவூலத் துறை அதிகாரிகளுடனும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மோதலைத் தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 80க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்ட நிலையில், வாஷிங்டனில் திரைமறைவில் நடைபெற்ற பாகிஸ்தானின் இந்த நகர்வுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பாகிஸ்தானும் டிரம்ப்பின் இந்தக் கூற்றை ஆமோதித்து வருகிறது. ஆனால், இந்தியா மூன்றாம் தரப்பு நாட்டின் தலையீட்டைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

அண்மையில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு அனுசரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version