திருச்சியில் நள்ளிரவில் பிரபல ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த ரவுடி பாதுஷாவை, ஒரு கும்பல் துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிச் சாய்த்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
பைக்கில் தப்ப முயன்றபோது கீழே விழுந்த பாதுஷாவை, சுற்றி வளைத்து அந்தக் கும்பல் கொலை செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெண் ஒருவருடனான தொடர்பு காரணமாக பாதுஷாவுக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
எனினும், இது பெண் விவகாரத்தில் ஏற்பட்ட கொலையா அல்லது கோஷ்டி மோதலா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி பாதுஷாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் நடந்த மோதலில், பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.