மின்வாரிய இணையதள சேவைகள் இன்று இயங்காது: மின்சார வாரியம் தகவல்

தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, உயரழுத்த மின்நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், இணையதள சேவைகள் இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள உயரழுத்த பில்லிங் தரவுத்தளம் மற்றும் சர்வர் அமைப்பு, மின்நுகர்வோரின் பில் விவரங்கள், மீட்டர் ரீடிங் தகவல்கள், ஆன்லைன் கட்டண சேவைகள் மற்றும் செல்போன் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முக்கிய வருவாய் சார்ந்த கணினி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை மேலும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும் மாற்றுவதற்காக, பழைய சர்வரிலிருந்து புதிய மேம்படுத்தப்பட்ட சர்வருக்கு தரவுத்தளத்தை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த முக்கியப் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உயரழுத்த பில்லிங் நுகர்வோர் போர்டல் தற்காலிகமாக செயல்படாது. இதனால், உயரழுத்த மின்நுகர்வோரும், கள அலுவலர்களும் இணையதள சேவைகளை அணுகுவதில் சிரமம் ஏற்படும்.

நுகர்வோருக்கு ஏற்படும் இந்த தற்காலிக சிரமத்திற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகள் முடிந்தவுடன், இணையதள சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version