ஐபிஎல் 2026: தோல்விக்கு பின் கம்மின்ஸ் பேச்சு – வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டிய ஹைதராபாத் கேப்டன்

2026 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. தோல்வி குறித்து பேசிய ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டினார். டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததில் தனக்கு வருத்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. இதில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் அடித்து ஹைதராபாத் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில், 'வைபவ் மிகச் சிறப்பாக விளையாடினார். அவருக்கு எதிராக எங்களிடம் அதிக வாய்ப்புகள் இல்லை. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பந்துவீச்சாளர்களுக்கு சவால் அதிகமாக இருந்தது. யார்க்கர் பந்துகளைச் சிறிதளவு தவறவிட்டாலும் விக்கெட் கிடைக்கும். ஆனால், வைபவ் தவறு செய்யாமல் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இது போன்ற ஒரு சிறந்த ஆடுகளத்தில் தவறுகளுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு' என்றார்.

244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி, 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது தவறான முடிவா என்ற கேள்விக்கு பதிலளித்த கம்மின்ஸ், 'டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இலக்கை விரட்டுவதற்கு இது ஒரு சிறந்த மைதானம். கடைசி வரை ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாகவே இருந்தது. நாங்கள் சரியான ரன் ரேட்டில்தான் இருந்தோம். ஆனால், முக்கியமான நேரங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்குக் காரணமாக அமைந்தது. 240 ரன்களுக்கு மேல் எடுக்கும்போது சில விஷயங்கள் நமக்குச் சாதகமாக நடக்க வேண்டும்' என விளக்கமளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்ற மிக இளமையான அணிகளில் எங்களது அணியும் ஒன்று. பிரபுல் மற்றும் சாகிப் போன்ற இளம் வீரர்கள் அபாரமாகச் செயல்பட்டனர். லீக் சுற்றில் நாங்கள் முதல் 2 இடங்களுக்குள் வர மிக அருகில் இருந்தோம். இந்த சீசனில் வீரர்கள் காட்டிய அணுகுமுறை எனக்குப் பெருமையாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்து நடைபெறும் இரண்டாவது குவாலிபையரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version