தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தவெக-வை நோக்கி அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் இணையத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவும் தவெக-வில் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
செய்தியாளர்கள் இதுகுறித்து நேரடியாகக் கேட்டபோது, செல்லூர் ராஜூ 'இரட்டை இலை' சின்னத்தை விரல்களில் சைகையாகக் காட்டி, 'தனது மூச்சு இருக்கும் வரை இரட்டை இலை தான்' என்பதை உறுதிப்படுத்தினார். மதுரையில் பாஜகவினர் அதிமுகவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது செல்லூர் ராஜூ அதிருப்தியில் இருந்ததாகவும், எடப்பாடி பழனிசாமியால் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் தேர்தலுக்குப் பின் அவர் மாற்று கட்சியை நோக்கி நகரக்கூடும் என ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சுக்கள் எழுந்தன.
மதுரை கிழக்கு தொகுதியில் செல்லூர் ராஜூ தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் ஆளுங்கட்சி பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெக-வில் உள்ள மாவட்டச் செயலாளர்களான கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் செல்லூர் ராஜூவை கட்சியில் சேர்ப்பதற்கு எதிராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரும் மூத்த தலைவரான செல்லூர் ராஜூவை கட்சியில் சேர்ப்பதற்கு உடன்படவில்லை.
மதுரை அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோரை தவெக-வில் சேர்க்கக் கூடாது என்பதில் சிடிஆர் நிர்மல் குமார் தீவிரமாக இருக்கிறார். அவரது சொல்படியே நிர்வாகிகளும் இயங்குவதாகக் கூறப்படுகிறது. தவெக-வில் இணையும் அதிமுகவினருக்கு உரிய மரியாதை இல்லை என்றும், ஜூனியர்களிடம் சென்று பதவியைப் பெற சீனியரான செல்லூர் ராஜூ விரும்பவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அதிமுக மீது அதிருப்தி அதிகமாகும் பட்சத்தில் செல்லூர் ராஜு, திமுகவை நோக்கி நகரலாம் என்றும் சிலர் பேசிக்கொள்கின்றனர்.