சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன், த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். "அடிதடி அமைச்சர், பவுடர் அமைச்சர், குதிரை பேர முதலமைச்சர்" என கிரிமினல் பின்னணி கொண்டவர்களின் கூடாரமாக த.வெ.க. அரசு இருப்பதாகவும், இப்படிப்பட்ட குற்றவாளிகளை வைத்துக்கொண்டு தி.மு.க.வைப் பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை என்றும் அவர் கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியில் அவதூறு பரப்ப த.வெ.க. அரசு முயற்சிப்பதாகவும், ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பரந்தாமன் தெரிவித்தார். நேற்று சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் மீதான வழக்கின் மூலம் நீதிமன்றத்தால் திரு. விஜய் அரசின் "மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது" என்றும், இந்த வழக்கில் அவரை கைது செய்ய வேண்டிய முகாந்தரம் இல்லை என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கியதன் மூலம், "குதிரைபேர சர்க்கார்" முதன்முறையாக மூக்கறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாமல், தினந்தோறும் தி.மு.க. மீது என்ன குற்றச்சாட்டுகளை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருவதாக பரந்தாமன் குற்றம் சாட்டினார். அந்த வகையில், திரு. அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு போடப்பட்டதாகவும், அவதூறு வழக்குகளில் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக ஓடி வந்து திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்ததன் பின்னணி என்ன என்றும், 6 முதல் 7 மணி நேரம் காவல்துறை விசாரணை நடத்தியதன் மர்மம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அந்த விசாரணையின் போது, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் த.வெ.க.வில் இணைய பணம் தருவதாக கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு என்றும், பாஜக எப்படி அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி கட்சியில் சேர்க்கிறதோ, அதேபோல காவல்துறையை வைத்து மிரட்டி ஆள் சேர்க்கும் வேலையை த.வெ.க. அரசு செய்வதாகவும் அவர் கூறினார்.
இந்த உண்மை வெளிப்பட்டவுடன் பதறிப்போய் சட்டத்துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் ஒரு பேட்டி கொடுத்ததாகவும், அதில் முறையான விளக்கம் அளிப்பதற்கு பதிலாக தனிநபர் அவதூறு மற்றும் உடல் கேலி செய்வதாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.வை ரவுடி என கூறுவதாகவும் பரந்தாமன் தெரிவித்தார். இப்படிப்பட்ட நிர்மல் குமார் மீது உசிலம்பட்டியில் நில மோசடி செய்ததாக 420 புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படிப்பட்டவர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ரவுடி என்று சொல்ல எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு தி.மு.க. தலைவரை கொன்று குவித்தவர் என்று கூறியது எந்த விதத்தில் நியாயம் என்றும், இப்படி அவதூறாக பேசும் ஆதவ் அர்ஜுனாவை ஏன் காவல்துறை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மீது வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கு உள்ளதாகவும், அவர் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு அமைச்சர் மீது பவுடர் குற்றச்சாட்டு இருப்பதாகவும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு அளித்திருப்பதாகவும், அமைச்சர் திரு. நிர்மல் குமார் மீது 420 புகார் இருப்பதாகவும், முதலமைச்சர் திரு. விஜய் மீதும் குதிரைபேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் பரந்தாமன் கூறினார். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட, குற்றவாளிகள் நிரம்பிய அமைச்சரவையுடன் த.வெ.க. அரசு இருப்பதாகவும், இப்படிப்பட்ட அரசு தி.மு.க.வை கேள்வி கேட்க துளியும் அருகதை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், 'விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி வாங்கி தருவதாக பேரம் பேசினார்' என்று கூறியதை சுட்டிக்காட்டி, யார் இந்த குதிரைபேரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார். தி.மு.க. 59 இடங்கள் வென்றுள்ள நிலையில், ஒரு எம்.எல்.ஏ., இரண்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முடியும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் த.வெ.க. அமைச்சர்கள் பேசுவது வடிகட்டிய பொய் என்றும், தி.மு.க. நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து தினந்தோறும் அரசு நிர்வாகத்தை கவனிக்க துப்பில்லை என்றும், ஆட்சிக்கு வந்து 56 நாட்களாகியும் மக்களுக்கான வேலை என்ன செய்துள்ளது இந்த அரசு என்றும் கேள்வி எழுப்பினார். குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை என்றும், சமூக வலைதளங்களில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் ஆர்.ஜே. சரண் ஜெயராமன் போன்றவர்களை பொய் காரணம் சொல்லி கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
தி.மு.க. மீது அவதூறுகளை பரப்பி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மேயர் பிரியா உள்ளிட்ட கழக மகளிர் நிர்வாகிகளை கொச்சையாக பேசிவரும் த.வெ.க. ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், 'மாற்றம் கொடுப்போம்' என்று கூறிவிட்டு அதிமுகவில் இருப்பவரை த.வெ.க.வில் சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
இன்னும் பலரை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் இந்த அரசு இருப்பதாகவும், இவற்றை எல்லாம் விட்டுவிட்டு வரக்கூடிய திங்கட்கிழமையில் இருந்தாவது மக்கள் பணியில் ஈடுபடுமாறும் பரந்தாமன் கேட்டுக்கொண்டார். இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலின் மாண்பை சிதைத்து, ஒரு மோசமான அரசியலை த.வெ.க. அரசு முன்னெடுத்து வருவதாகவும், ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம் என்றும் அவர் கூறினார்.

