தமிழக வேளாண் பட்ஜெட் 2026-27: புதிய திட்டங்கள் அறிவிப்பு

தமிழக வேளாண் பட்ஜெட் 2026-27 சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் 2026-27, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில், விவசாயிகளின் நலன் காக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளாண் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

முதல்வர் விஜய், 'பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகவ் முதல்வர்' என்றும், 'கோட் சூட் அணிந்த விவசாயி' என்றும் அமைச்சர் வினோத் குறிப்பிட்டார். வேளாண் தொழில் மற்றும் உழவர் நலனைப் பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக இருப்பதாகவும், வேளாண்மை பாதிக்கப்பட்டால் மற்ற துறைகளும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், கடந்த கால திட்டங்கள் தொடரும் என்றும், புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். டெல்டா பகுதிகளில் 2509 கி.மீ. வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் நலன் கருதி ரூ.134 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுதி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரிமைகளும், வேளாண்மையும் பாதுகாக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வினோத் குறிப்பிட்டார். விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்காக ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மண்வளப் பாதுகாப்புத் திட்டத்திற்காக ரூ. 600 கோடி அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த ஆண்டு ரூ. 122 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

உயர் உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தலா ரூ.4000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் ரூ.4 கோடியில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் வழங்க 'உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம்' செயல்படுத்தப்படும், இதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்காக மாநில அரசின் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 34.72 கோடி, சிறுதானிய இயக்கத்திற்கு ரூ. 63.81 கோடி, குறுதானிய இயக்கத்திற்கு ரூ. 7.61 கோடி, பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ. 27.21 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க ரூ. 7.35 கோடியில் காட்டுப்பன்றி சேதத்தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாய நிலங்களில் நிரந்தப் பசுமைக்கு 'வேளாண் காடுகள் திட்டத்திற்கு' ரூ.17.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் பெறுவார்கள். மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு 100% மானியம் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு 'சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது' வழங்கப்படும், இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பெற 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு 'மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பெயரில் விருது' வழங்கப்படும். முதல் பரிசுக்கு ரூ.2.50 லட்சம், இரண்டாம் பரிசுக்கு ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடியில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பனைவிதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி மற்றும் பனைப் பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி, பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்து தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version