திருப்பதி லட்டு தரம்: மத்திய அரசுடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு குழுமத்தின் கீழ் இயங்கும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில், 2019 முதல் 2024 வரை வழங்கப்பட்ட லட்டுகளில் 70 லட்சம் கிலோ தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. மற்றும் ஆந்திர அரசு தனி விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகின்றன. சமீபத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என்றும், ஆனால் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், தேவஸ்தானம் தயாரிக்கும் லட்டு பிரசாதத்தின் பாரம்பரிய சுவை மற்றும் புனிதத்தன்மை மாறாமல், அதன் தரம் மற்றும் ஆயுட்காலத்தை நீட்டிக்க தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். மேலும், லட்டு தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் முறைகளை நவீனமயமாக்கவும், ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், மூலப்பொருட்கள் கொள்முதல் முதல் தயாரிப்பு வரை கடுமையான தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

பிரசாதங்கள் தயாரிக்கும் மடப்பள்ளி மற்றும் சேமிப்புக் கிடங்குகளை நவீனமயமாக்குவது, ரசாயன அல்லது பிற கலப்படங்களைத் தடுக்க நவீன அறிவியல் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பரிந்துரைப்பது, உணவுப் பகுப்பாய்வாளர்கள் மற்றும் சமையல் பணியாளர்களுக்கு மேம்பட்ட பகுப்பாய்வு நுட்பங்களில் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளையும் மத்திய அரசு நிறுவனம் மேற்கொள்ளும். இதன் மூலம் திருப்பதி லட்டின் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version