திமுக, அதிமுக கூட்டணி அமைக்க முயன்றதே எம்எல்ஏக்கள் தமாகா பக்கம் செல்வதற்குக் காரணம் என்று மதிமுக எம்பி துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமாகா அரசுக்கு எம்எல்ஏக்களைக் களவாட வேண்டிய அவசியம் இல்லை. திமுக, அதிமுக கூட்டணி முயற்சிதான் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்யக் காரணம். திமுக, அதிமுக தலைமை மீதுள்ள நம்பிக்கையின்மையால் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர்.
திமுகவுடன் ரகசியக் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகுகின்றனர். எம்எல்ஏக்களைக் களவாடுவது தமாகாவா அல்லது திமுகவா? பணம் கொடுக்காமல் தமாகா வெற்றி பெற்றுள்ளது. ஆனால், திமுக பல கோடி ரூபாய் செலவு செய்தும் தோல்வியடைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்தும் திமுக தோற்றது.
திமுகவின் முன்னாள் அமைச்சர்களின் தொகுதிகளில் 80 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் திமுக வெற்றி பெற முடியவில்லை. குதிரை பேரம் செய்வது திமுகதான். மதிமுக எம்எல்ஏக்களை திமுக விலைக்கு வாங்கிவிட்டது. திமுக – தமாகா ஒரே அணியில் இணைவது ஏற்புடையதல்ல.
தமாகா தனது கொள்கை எதிரி பாஜகதான் என வெளிப்படையாக அறிவித்துவிட்டது. பாஜக – அதிமுக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்ற திமுக எப்படி பாஜகவை எதிர்க்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

