தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை

கோவில்பட்டி அருகே வேடநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மறுநாள் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை அடுத்து, 10 தனிப்படைகளை அமைத்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவர் மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்தான் மாணவியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், மே 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை நீதிபதி பிரீத்தா, தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மரண தண்டனையாக தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தர்ம முனீஸ்வரன் கடந்த 2020-ம் ஆண்டு எட்டயபுரம் அருகே பாப்பா என்ற மூதாதியிடம் நகைகளை திருடி, பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, தொடர்ந்து நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த நிலையில், மீண்டும் இது போன்ற கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version