தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 20 பேர் காயம்

தூத்துக்குடி அருகே கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு பகுதியில் இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து ஓட்டுநர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கி ஓட்டி வந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரியின் பிரேக் பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் இசக்கி, லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு பழுதை சரிசெய்ய முயன்றார். ஆனால், லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் எச்சரிக்கை குறியீடுகள் எதுவும் வைக்கப்படாததால், பின்னால் வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. பேருந்து ஓட்டுநர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், வாகன இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். மேலும், பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். உடனடியாக, கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, நவீன கருவிகள் மூலம் பேருந்தை வெட்டி ஓட்டுநர் சரவணனை பத்திரமாக மீட்டனர். காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், டேங்கர் லாரி ஓட்டுநர் இசக்கியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version