திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் கண்டிகை ரமணா நகரில் வசிக்கும் கிரிதரன், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகன் கவுதம் (வயது 16), ஆவடியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரச் சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மாணவர்களின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த கவுதம், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாணவரின் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
