திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: முதல்வராகும் கனவில்லை – திருமாவளவன்

சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

"தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவது என்பது எளிதான காரியமல்ல என்பதை நான் அறிவேன். பா.ஜ.க ஆதரவு கட்சி என த.வா.க-வை நான் விமர்சித்தது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. த.வா.க அரசின் அமைச்சரவையில் நாங்கள் ஒருபோதும் இடம்பெறமாட்டோம் என்பதையும் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன்" என திருமாவளவன் தெரிவித்தார்.

"குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுப்பதற்காகவே த.வா.க-விற்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மீண்டும் தேர்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஆதரவு நீடிக்கிறது. இதில் எந்த ரகசியமும் இல்லை, அனைத்தும் வெளிப்படையாகவே நடக்கின்றன. வதந்திகள் பரவுவது இயல்புதான். நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

"என்னை முதலமைச்சராக்க திமுக, அதிமுக தரப்பில் இருந்து யாரும் அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை. அப்படி யாராவது கேட்டதாக வந்தால் அது அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கும். சில நலம் விரும்பிகள் பேசியிருக்கலாம். கிசுகிசுக்கள், முணுமுணுப்புகளின் அடிப்படையிலேயே இதுபோல் பேசினேன். நான் முதலமைச்சர் ஆவேன் என்ற கருத்தை நான் கேளிக்கையாகவே எடுத்துக்கொண்டேன். நாங்கள் ஒரு கட்சி நடத்துகிறோம். மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளிலேயே நாங்களும் முடிவெடுப்போம் என நினைக்கக்கூடாது. எங்கள் கட்சித் தோழர்களிடம் பேசித்தான் நாங்கள் முடிவெடுப்போம். உடனடியாக பேரம் பேசுகிறோம் என்று சொல்வது நியாயமல்ல. எங்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. இரண்டு இடங்களை வைத்துக்கொண்டு நான் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை. 2 சீட்டுகளை வைத்துக்கொண்டு யாருடனும் நாங்கள் பேரம் பேசவில்லை" என்றும் திருமாவளவன் விளக்கினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version