தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் இனி புதிய கொடிமரம் அமைப்பதற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவுகள், திருக்கோயில்களில் கொடிமரம் பிரதிஷ்டை செய்வதில் வெளிப்படைத்தன்மையையும், ஆகம விதிகளுக்கு உட்பட்ட நடைமுறைகளையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதுவரை, பழுதடைந்த கொடிமரங்களை அகற்றிவிட்டு புதியவை அமைப்பது அல்லது புதிதாக கட்டப்படும் கோயில்களில் கொடிமரம் நிறுவுவது போன்ற பணிகள் ஆணையரின் முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், இனிமேல் இத்தகைய அனைத்து பணிகளுக்கும் ஆணையரின் முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். இது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத அனைத்து திருக்கோயில்களுக்கும் பொருந்தும்.
புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய விரும்பும் செயல் அலுவலர்கள், ஆணையரிடம் அனுமதி கோரி, பிரதிஷ்டை நடைபெறும் நாளுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், செயல் அலுவலர், தக்கார் அல்லது அறங்காவலர் குழுவின் தீர்மானம், மண்டல ஸ்தபதியின் கருத்துரு, அர்ச்சகரின் பரிந்துரைக் கடிதம், முகூர்த்த பட்டோலை, வரைபடக் குழுவின் பரிந்துரை, நிர்வாக அனுமதி, புதிய கொடிமரத்தின் வண்ணப் புகைப்படம் போன்ற அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
பழைய கொடிமரம் அகற்றப்பட்டிருந்தால், அதற்கான ஆணையரின் உத்தரவு மற்றும் சரிபார்ப்பு அலுவலர்களின் பதிவேட்டு நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மேலும், பிரதிஷ்டை நிகழ்வுகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கும், ஆகம நெறிமுறைகளுக்கும் உட்பட்டு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். மண்டல உதவி அல்லது துணை ஆணையர், சரிபார்ப்பு அலுவலர், மண்டல ஸ்தபதி, துறை பொறியாளர், சரக ஆய்வாளர், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
உபயதாரர்கள் மூலம் கொடிமரம் வழங்கப்பட்டால், அவர்களின் சம்மத கடிதம், கொள்முதல் அனுமதி ஆவணம் போன்ற விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். கொடிமரம் இல்லாத திருக்கோயில்களில் முதன்முறையாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படும்போது, மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதலுடன், ஆகம வல்லுநர்களின் கருத்துருவும் கட்டாயம் பெறப்பட வேண்டும்.
பழைய கொடிமரத்தில் இருந்த கவசங்களை புதிய கொடிமரத்தில் பொருத்துவதற்கு முன், அவை பொருந்துமா என்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய செம்பு, பித்தளை, தங்கம் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களை பொருத்துவதற்கு உரிய துறை அனுமதியை பெற வேண்டும். கொடிமரத்தின் அடியில் வைக்கப்படும் பழைய மற்றும் புதிய விலை மதிப்புள்ள உலோகங்கள், இரத்தினங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அனைத்தும் கோயிலின் பதிவேட்டில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
கொடிமரப் பணிகள் தொடங்கிய தருணம் முதல் பிரதிஷ்டை நிறைவடையும் வரை அனைத்து பணிகளும் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அவை கோயிலில் நிரந்தர ஆவணமாக பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான இறுதி அறிக்கை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் பிரதிஷ்டை நடைபெறவில்லை என்றால், காரணத்தை குறிப்பிட்டு புதிய தேதிக்காக மீண்டும் ஆணையரின் அனுமதி பெற வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை, திருக்கோயில்களில் கொடிமரம் அமைக்கும் பணிகளில் ஒரு புதிய ஒழுங்குமுறையைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

