தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளியில் உள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளி முதல்வர் மற்றும் இயக்குனருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த 12 ஆம் தேதி தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், இருவர் சமீபத்தில் அதிக பணம் செலவழித்ததும், நண்பர்களுக்கு விருந்து அளித்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த இரு மாணவர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ரூபா ரெட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், ரூபா ரெட்டியின் கண்டிப்புக்கு ஆளானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் இருவரும் விடுதியில் அதிக பணம் மற்றும் மொபைல் போன்களை வைத்திருந்ததை ரூபா ரெட்டி கண்டுபிடித்தார். இது தொடர்பாக அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, அந்த மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற்றி, வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களாக மாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும், ரூபா ரெட்டியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஐந்து நாட்கள் அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கும் முயற்சியில் சிக்காமல் இருக்க கையுறைகள், கத்தி, முகமூடி போன்றவற்றை மாணவர்கள் வாங்கியுள்ளனர். கொலை நடந்த நாளில், ஒரு மாணவர் கையுறைகள் மற்றும் முகத்தை மறைக்கும் தொப்பி அணிந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். மற்றொரு மாணவர் வெளியே நின்று நோட்டமிட்டுள்ளார். படுக்கையறையில் இருந்த சுமார் 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்றபோது, மாணவரின் தொப்பி கீழே விழுந்துள்ளது. இதை கண்ட ரூபா ரெட்டி அவரை அடையாளம் கண்டுள்ளார். தங்களை போலீசாரிடம் காட்டிக் கொடுத்து விடுவார் என பயந்த மாணவர், சக மாணவருடன் சேர்ந்து ரூபா ரெட்டியை கத்தியால் 27 முறை குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்க பயன்படுத்திய பொருட்களை புதைத்துவிட்டு, கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி உள்ளனர். கொண்டமல்லேபள்ளியில் உள்ள டோனியாலா கூட்டு சாலையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, பைக்கில் வந்த இருவரும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1.54 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் கொலை செய்யப்பட்ட பள்ளி முதல்வர் ரூபா ரெட்டியின் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
