தெலங்கானா மாநிலத்தில், நிலம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத சைபராபாத் காவல் ஆணையர் ரமேஷ் மற்றும் துணை காவல் ஆணையர் என்.கோட்டி ரெட்டி ஆகியோருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சி.வி.பாஸ்கர் ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேட்ச்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜீடிமேட்லா பகுதியில் 6.15 ஹெக்டேர் நிலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வந்தது. இது தொடர்பாக சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் எந்தவித அத்துமீறலும் இன்றி பாதுகாக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காவல்துறை செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீன் என்பவர், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.பாஸ்கர் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 'சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர் நீதிமன்ற உத்தரவை காவல்துறை செயல்படுத்தவில்லை என்ற காரணத்தை ஏற்க முடியாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இருக்கும்போது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், விசாரணை என்ற பெயரில் ஒரு சிவில் விவகாரத்தில் காவல்துறையின் தலையீட்டையோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நடவடிக்கைகளையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என்று குறிப்பிட்டார்.
மேலும், காவல்துறை சமர்ப்பித்த அறிக்கை மூலம், சைபராபாத் காவல் ஆணையர் மற்றும் துணை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரமும் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும் நீதிபதி தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அவமதித்துவிட்டு வெறும் மன்னிப்பு கேட்பதன் மூலம் பின்விளைவுகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும், இதுபோன்ற மன்னிப்பை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி நீதிபதி குறிப்பிட்டார்.
இதனையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருந்த குற்றத்திற்காக சைபராபாத் காவல் ஆணையர் ரமேஷ், துணைக் காவல் ஆணையர் என்.கோட்டி ரெட்டி ஆகியோருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதல் ஒரு வாரம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த தடையும் விதிக்கப்படாத பட்சத்தில், இருவரும் உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரண் அடைய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
