லண்டனில் தமிழக முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் பயணத்தின்போது, சுமார் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், கடந்த 14.9.2026 அன்று இங்கிலாந்தின் லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும் பல்வேறு முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே இந்த முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தையும் வழங்கியுள்ளது.
ஹிந்துஜா குழுமத்தின் முதலீடுகள் குறித்து அக்குழுமத்தினர் முதலமைச்சரிடம் விளக்கினர். வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) போன்ற துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் நோக்கக் கடிதங்கள் மூலம் ரூ.15,300 கோடிக்கு அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' நிறுவனத்துடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்நிறுவனம், தமிழ்நாட்டில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L) சார்ந்த வசதிகளை நிறுவி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், உலகளாவிய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பக் கூட்டாண்மைகள் கிடைக்கும். இது சர்வதேச வாகன உற்பத்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சார்ந்த மதிப்புச் சங்கிலிகளுடன் மாநிலத்தின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.
வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்தணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் திறனை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் அதிகரிக்கும்.
மேலும், தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கி, 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க ஆதரவளிக்கும்.
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே தேர்ந்தெடுப்பதாக விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த முதலீட்டைச் சாத்தியமாக்க தமிழ்நாடு அரசு அனைத்து ஆதரவையும் உறுதியளித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோரும் முதலமைச்சரைச் சந்தித்தனர்.
