வெளிநாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற விரும்பும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு தமிழக அரசு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 மாணவர்களுக்குத் தலா ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித்தொகைத் திட்டமானது, முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சர்வதேச அளவில் உயர்தரக் கல்வியைப் பெறும் நோக்கத்துடன் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2026-2027-ம் கல்வியாண்டில் வெளிநாடுகளில் முதுகலைப் படிப்பைத் தொடர விரும்பும் 10 மாணவர்களுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும்.
இது தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 'தமிழ்நாடு அரசு 2026-2027-ம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ/ மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள், 2026-2027-ம் கல்வியாண்டில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும், பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையான தேர்ச்சி சதவீதத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் மற்றும் நிதி, மனிதநேயம் மற்றும் கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 15, 2026 ஆகும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பயின்று தங்கள் எதிர்காலத்தை வளமாக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
