சென்னை: அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இனி செல்போன் ஸ்பீக்கரைப் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் அனைத்துப் போக்குவரத்து கழகங்களுக்கும் இந்த முக்கிய அறிவிப்பை அனுப்பியுள்ளார். இதன் மூலம், பேருந்துகளில் பயணம் செய்யும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பயண நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
**ஸ்பீக்கருக்குத் தடை, இயர்போன் கட்டாயம்:**
பேருந்துகளுக்குள் பயணிகள் செல்போனில் பேசும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ ஸ்பீக்கரைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, சக பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில், கட்டாயம் இயர்போன் அல்லது ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
**ஓட்டுநர்களுக்கும் கட்டுப்பாடு:**
பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும்போது, மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-இன் விதி 5(10)-இன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும்.
**விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்:**
இந்த புதிய நடைமுறைகள் குறித்துப் பயணிகள் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் உடனடியாக விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228-இன் படி, சக பயணிகளுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும்.
**பயணிகள் நலன் கருதி நடவடிக்கை:**
கைபேசியில் பயணம் முழுவதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல், கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன்/ஹெட்ஃபோன் இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலியில் படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். Bluetooth இயர்போன்/ஹெட்ஃபோன் பயன்படுத்தி பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும்.
**வரவேற்பு:**
போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தினசரி அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும், பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
