அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், தாய் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு தாய்மார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்ற பெயரில் இந்த சிறப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கௌரவம் அளிக்கப்படும். தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனுக்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருவதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம், குழந்தை பராமரிப்பு சேவைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சீர் என்ற மரபின்படி, முதலமைச்சர் தாயின் சகோதரராக புதிய குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் இந்த மோதிரம் வழங்கப்படுகிறது. இது தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிப்பதாகவும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக இந்த மோதிரத்தை வழங்குகிறது.

இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் பயனைப் பெறுவார்கள். முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர் 15, 2026 அன்று இந்த 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கிறார். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version