தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 2031ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
'வெற்றி தமிழகம்' தொலைநோக்குப் பார்வையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை ஈர்த்தல், ஆரம்பகட்ட முதலீட்டு தடைகளை குறைத்தல் மற்றும் உலகத் தரத்திலான சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், போக்குவரத்து துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 13.07.2026 அன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 14.07.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில், ITDP India மற்றும் Guidance Tamil Nadu அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்பக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று, தற்போதுள்ள உயரழுத்த/அதிஉயரழுத்த (HT/EHT) மின் இணைப்புகளில் அமைக்கப்படும் EV சார்ஜிங் வசதிகளுக்கு தனி துணை மின்மீட்டர் (EV Sub-meter) அமைக்க அனுமதிப்பது. இதன் மூலம், தனி மின் இணைப்பு பெற வேண்டிய அவசியமில்லை. மேலும், நிலைக்கட்டணம்/ குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் (Fixed/Demand Charges) விதிக்கப்படாது. மின்சார வாகனங்களுக்கான (EV) மின் கட்டணத்தின் கீழ், மின்பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணம் (Energy Charges) மட்டும் வசூலிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறையால், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் கூடுதல் மின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, குறைந்த முதலீட்டில் விரைவாக மின்வாகன சார்ஜிங் வசதிகளை அமைக்க முடியும். மேலும், தேவைக்கேற்ப தனி மின் இணைப்பு பெறும் வசதியும் வழங்கப்படும்.
மின்சார வாகனக் கொள்கை 2023-ல் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்தும், கட்டணச் சலுகைகள் வழங்குவது குறித்தும் அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பு உருவாக்குவோர்கள்/ முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய ஏதுவாக, தனித்துவமான மின் கட்டணப் பிரிவில் நடைமுறையில் உள்ள நிலைக்கட்டணம்/ குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தை (Fixed/Demand Charges) கணிசமாகக் குறைக்க அல்லது நீக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
இந்த முக்கிய நடவடிக்கைகள் மூலம், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட தடைகள் பெருமளவில் குறைக்கப்படும். தனியார் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு விரைவாக விரிவுபெற்று, 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை அடைய வழிவகுக்கும்.
மேலும், பசுமை போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கும் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக அமையும் என்று அரசு தெரிவித்துள்ளது.
