தமிழக பட்ஜெட்: தென் மாவட்டங்கள் முதல் திருநங்கைகள் வரை.. முக்கிய திட்டங்கள் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் வெளியீடு

தமிழக பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட உள்ளன. இதன் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை வழி ஆடை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக பல கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி மையம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

கல்வித் துறையில், 2027-28 ஆம் கல்வி ஆண்டில் மதுரையில் ஒரு சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும். மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 20,000 பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்துடன் இணைந்து, புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், சூரிய மின் பலகைகள் பொருத்தும் வீட்டு நுகர்வோருக்கு ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

கிராமப்புற வேலை உறுதி மற்றும் வாழ்வாதார உறுதி திட்டத்தின் கீழ், 150 நாட்களுக்கு வேலை வழங்கும் 'வெற்றி 150' திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே 125 நாட்கள் வேலை நிறைவு செய்துள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு அரசு வழங்கும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்படும். தற்போது சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் என பல நிலைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இனி, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய வழி திட்ட அனுமதி தளம் (SPEED) உருவாக்கப்படும். இதை செயல்படுத்த ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அனைத்து மாநகராட்சிகளிலும் வீதிகள் மேம்படுத்தப்படும். சரியான சாலை இணைப்பு, நடைபாதைகள், மிதிவண்டிகளுக்கான தனிப்பாதைகள், மேம்பட்ட சாலை சந்திப்புகள், பள்ளி பாதுகாப்பு செல்லும் பாதைகள் மற்றும் நவீன எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கப்படும். நவீன நகர்ப்புற சாலைகள் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சரிசெய்ய ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சாலைகளில் குறைபாடுகள் இருந்தால், பொதுமக்கள் ‘நம்ம சாலை’ செயலி மூலம் உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தகவல் தெரிவிக்கலாம். புகார்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தக நகரம் 'அறிவகம்' எனும் பெயரில் உருவாக்கப்படும்.

திருநங்கைகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் திறன் பயிற்சி மற்றும் தொழில் தொடங்க கடன் வசதி ஏற்படுத்தித் தரப்படும். மேலும், திருநங்கைகள் தங்குமிட வசதி 'அரண்' எனும் பெயரில் 5 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.

திருமண பெண்களுக்கு ரூ.812 கோடி மதிப்பில் 8 கிராம் தங்க காசு மற்றும் ஒரு பட்டுப்புடவை 'அண்ணனின் சீர்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் 'தாய்மாமன் சீர்' திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2031 ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் இளைஞர்களை செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் பயிற்சி கொடுத்து தயார்படுத்த ஏ.ஐ. தொழில்துறை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

விளையாட்டுத் துறையில், 8-12 வயதுக்குட்பட்ட திறமையான சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கவும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மின்சார மானியமாக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.1543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும்.

வரும் 5 ஆண்டுகளில் 3000 திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்து விழா நடத்தப்படும். 250 திருக்குளங்கள் மற்றும் 75 மரத்தேர்களை சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் வரும் திருக்கோவில்களில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்துறைக்கான அறிவிப்புகளில், புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும். இது புத்தாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய தொழில் துறைகளை ஆதரித்தல், நிலையான வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் 'வழிகாட்டி 3.0' எனும் புதிய முதலீட்டு சேவை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு தேவையான தகவல்கள், அனுமதிகள், சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் விரைவாக கிடைக்கும். 'சிங்கிள் விண்டோ போர்டல் 3.0' மேம்படுத்தப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும்.

தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு சேவை பிரிவு அமைக்கப்படும். தொழில் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் நோக்கில் "மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்", "ட்ரை போர்ட்ஸ்" மற்றும் பெட்ரோல் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும்.

தமிழ்நாட்டின் புதிய துறைமுகங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும். ரூ.90 கோடி மொத்த மதிப்பில் தமிழகத்தில் 5 புதிய தொழில் பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறைக்கு ரூ. 2142 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிதாக தொழில் துவங்குவோருக்கு மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் பல திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 225 கோடி, மூலதன மானியங்கள் திட்டத்தின் கீழ் ரூ. 352 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்டீல் தயாரிப்பை ஊக்குவிக்க, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1678 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version