பாஜகவில் இருந்து விலகியது ஏன்? அண்ணாமலை முதல்முறையாக விளக்கம்!

புதிய இயக்கத்தின் மாநாட்டில் பேசிய அண்ணாமலை

பாஜகவில் இருந்து விலகி 'வீ தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை, அதன் மாநாட்டில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்தும், மத நம்பிக்கை குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

'பாஜகவில் இருந்து விலகியது குறித்து நான் இங்குதான் முதல்முறையாக பேசுகிறேன். எனக்கு பாஜக மீது கோபம் இருந்தது உண்மைதான். ஆனால், அதை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. பாஜகவில் இருந்து விலகிய பிறகும், நான் யாரையும் பற்றி 38 நாட்கள் தவறாக பேசவில்லை. அப்போது திமுகவினர் என்னை பாஜகவின் 'பீ டீம்' என்று விமர்சித்தனர். சிலர், வெளியே வந்து பாஜகவை விமர்சித்தால் தான் ஆதரவு கிடைக்கும் என்று கூறினர். ஆனால், நான் பழிச்சொற்களை சுமந்துகொண்டு வெளியே வர விரும்பவில்லை. எங்களுக்கு என தனிப்பாதை இருக்கிறது. அதில் சென்று மக்களுக்கு நல்லது செய்வோம். இதுதான் எனது நிலைப்பாடு. இன்றும் நான் அதை வலியுறுத்துகிறேன். எனது மதம் இந்து மதம். நான் திருநீறு, குங்குமம் அணிபவன். ஆனால், வீட்டிலிருந்து வெளியே வரும்போது எனது மதத்தையும், சாதியையும் வீட்டிலேயே வைத்துவிட்டுத்தான் வருகிறேன். நான் அனைவருக்கும் பொதுவான ஒருவன். ஒவ்வொரு முறையும் மதத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான இந்து அனைத்து தரப்பு மக்களையும் சமமாகவே நடத்துவான்' என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் மாநாட்டில், போதைப்பொருளுக்கு எதிராக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம் தோறும் போதை தடுப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக ஏற்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, 'இந்த அமைப்பு மூலம் ஆளும் தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. தற்போதைய அமைச்சரவையில் பலர் புதியவர்கள். செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சர்கள் என்பதால், அவர்கள் தடுமாறத்தான் செய்வார்கள். எனவே, ஒரு நல்ல சமூகம் என்ற முறையில், நாம் அவர்களை கீழே தள்ளுவதற்கு பதிலாக, தூக்கி நிறுத்த வேண்டும். நமக்கு அதிகார வெறி இல்லை. தவெக அரசு தடுமாறும் போது, நாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதே நமது நோக்கம்' என்றார்.

மேலும் அவர் பேசுகையில், 'இந்த ஆண்டு தவெக அரசு 80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கப் போகிறது. அடுத்த ஆண்டும் இதே நிலைதான் நீடிக்கும். தவெக ஆட்சி முடியும் போது, தமிழகத்தின் கடன் சுமை 14 முதல் 15 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இந்த அமைப்பில் 50 லட்சம் பேர் இணையும்போதுதான், 'தமிழ்நாடு நம்மை அழைக்கிறது' என்று அர்த்தம். நாம் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. தாமாக முன்வந்து, இந்த மாற்றத்திற்கு துணை நிற்போம் என்று மக்கள் வரும்போதுதான் எல்லாம் நடக்கும். அடுத்த 6 மாத காலத்திற்கு எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்கான மாதமாக அனுசரிக்கப்படும். 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். செப்டம்பர் மாதம் பெண்களின் பாதுகாப்புக்கான இயக்கம் செயல்படுத்தப்படும். இப்படி 6 மாதங்களுக்கு, 6 முக்கிய பிரச்சனைகளை மையப்படுத்தி செயல்பட இருக்கிறோம். தனி மனிதனாக செயல்படும்போது நிச்சயம் மாற்றம் ஏற்படும்' என்று தெரிவித்தார்.

'Gen Z இளைஞர்களிடம் பேசவே முடியாது, அவர்கள் நினைத்ததை செய்வார்கள்' என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. இந்த மேடையில் இருக்கும் அனைவரும் Gen Z தான். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரியும் Gen Z தான். வீ தி லீடர்ஸ் அமைப்பில் 19 லட்சம் பேர் உள்ளனர். இதில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டோர் 14 சதவீதமும், 26 முதல் 39 வயதுக்குட்பட்டோர் 40 சதவீதமும் உள்ளனர். இந்த இயக்கம், 39 வயதுக்கு கீழான 53 சதவீத இளைஞர்களைக் கொண்டது. அவர்களின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டும். அவர்கள் சமூகத்தை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். மாற்றத்தை வேகமாக எதிர்பார்க்கிறார்கள்.

இந்த 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான், 2026ல் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031லும் அவர்கள்தான் மீண்டும் ஒரு பெரிய ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தப்போகிறார்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை' என்று அண்ணாமலை தனது உரையை நிறைவு செய்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version