தமிழக வெற்றிக்கழக அரசு, மே 10 அன்று பொறுப்பேற்ற நிலையில், 2026-27 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியதும், நிதியமைச்சர் மரிய வில்சன் உரையாற்றினார்.
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்து வெறும் 3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தவெகவின் வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல, அது தமிழக மக்களின் வெற்றி என்றும் குறிப்பிட்டார். பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து ஜனநாயக ரீதியாக முதல்வர் இந்த சபையில் அமர்ந்துள்ளார் என்றும், தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசின் முக்கிய லட்சியமாக வளர்ச்சி முன்னிறுத்தப்பட்டுள்ளது. 2036 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளதையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். உண்மையான சமூக நீதியை கொள்கையாகக் கொண்டுள்ள தவெக அரசு, டெண்டர் முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது.
மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் மொத்தமாக ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாயை மேலும் அதிகரிக்க, வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரூ.139 கோடி மதிப்பீட்டில் 10,000 அரசுப் பள்ளிகளில் 'சூப்பர் கிளீன்- சூப்பர் கேம்பஸ்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், 3734 பள்ளிகள் ரூ.2132 கோடியில் நவீனப்படுத்தப்படும். பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை சீர்திருத்தம் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.15,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' இயக்கத்திற்கு சிறப்பு செயலி (APP) உருவாக்கப்படும். பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் சைக்கிள்கள் வழங்கப்படும். இதற்காக 5 லட்சம் மாணவர்களுக்கு ரூ.277 கோடி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.8393 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 'வெற்றி மடிக்கணினி' திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல, கிராமிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்முனைவு ஆர்வத்தை மேம்படுத்த 'வெற்றித் திறன் பயிற்சி' திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய, சர்வதேச போட்டிகளில் வெல்லும் 500 வீரர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் 1 மணிநேரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு ஒதுக்கப்படும்.
சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணனின் சீர் வரிசை' திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. BC, MBC மற்றும் சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.17,000 கோடி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1458 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

