மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில், தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகளில் பள்ளி மாணவர்களைக் கொண்டு கட்சி கொடிகளை கட்ட வைத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வடபுதுப்பட்டி சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடந்து ஆபத்தான முறையில் தடுப்புச் சுவரில் ஏறி கம்பிகளில் தவெக கட்சி கொடிகளைக் கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகையில், 'தமிழ்நாடு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து, தனிப்பட்ட முறையில் கட்சி கொடிகளைக் கட்ட நாங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை' என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் பெற்றோர்கள் புகார் அளித்தும், காவலர்கள் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து, யாரையும் தண்டிக்க வேண்டாம் என உத்தரவிட்டதாகவும் தெரிகிறது. சீருடையில் இருந்த பள்ளி மாணவர்களைக் கொண்டு கட்சி கொடிகளைக் கட்ட வைத்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் கொடிகளை ஏற்றி வைக்கும் செயலில் ஈடுபடுத்துவது சரியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version