கோவையில் கல்லூரி மாணவர் அமுதன், தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மருத்துவ அறிக்கை இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர் இளவரசன் (18) மற்றும் அவரது நண்பர்கள், கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த கும்பலால் தாக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன்களும் பறிக்கப்பட்டன. இது குறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சக மாணவரான அமுதன் (19) இந்த சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அதிகாலையில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்புடைய சிலர், அமுதனை அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவராக அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காலை 8.30 மணியளவில் அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகிய இருவரையும் மலுமிச்சம்பட்டி அருகே ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அதிகாலை நடந்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், அவர்களை அருகிலுள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் அமுதன் பலத்த காயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அமுதன், அன்றைய தினம் காலை 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அமுதனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர் அமுதன் தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவே உயிரிழந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி காலை, அமுதன் மற்றும் அவரது நண்பர் சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் உடலில் பல காயங்களுடன் தூங்கச் சென்ற அமுதன், தலையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும், மாணவர் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன.
