தமிழ்நாட்டில் தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி அறிவித்துள்ளார். கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
செட்டிநாடு, நடுவூர், சின்னசேலம் ஆகிய அரசுப் பண்ணைகளில் முயல் வளர்ப்புப் பிரிவுகள் நிறுவப்பட்டு, புறக்கடை முயல் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். இதற்காக சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, ரூ.0.28 கோடி செலவில் புறக்கடை முயல் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.0.70 கோடி செலவில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்படும். திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் ரூ.0.71 கோடி மதிப்பில் மற்றொரு பன்றி வளர்ப்புப் பண்ணை அமைக்கப்படும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.30 கோடி செலவில் உயிரியல் பாதுகாப்பு நிலை BSL-3 ஆய்வகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதேபோல், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 30 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட நவீன ஒருங்கிணைந்த இறைச்சி பதப்படுத்தும் ஆலை நிறுவப்படும்.
சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் கிடேரி வளர்ப்பு மையம் ஒன்று அமைக்கப்படும். விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு (ABC) நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பயன்பாட்டுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
வெறிநோயைத் தடுப்பதையும் கட்டுப்படுத்துவதையும் வலுப்படுத்தி, வெறிநோயற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்கை அடைய, தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி (ARV) செலுத்தும் பணி மேலும் வலுப்படுத்தப்படும். தெருவிலுள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்திற்காக ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
துறைசார் பண்ணைகளில் ரூ.1.25 கோடி செலவில் ஊறுகாய்ப்புல் (Silage) உற்பத்தி அலகுகள் நிறுவப்படும். கால்நடை மருத்துவ நிலையங்கள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் 'கால்நடை காவலன் விருது' அறிமுகப்படுத்தப்படும்.
ஓசூர், கோழி வளர்ப்பு உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் மாணவர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம், தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவிகளுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம், உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவிகளுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் ஆகியவையும் அமைக்கப்படும். உதகமண்டலம் மாவட்ட கால்நடைப் பண்ணையில் ரூ.6.60 கோடி செலவில் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து (Sex-Sorted Semen) உற்பத்தி செய்யப்படும். கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கமலி தெரிவித்தார்.
